அயோத்தி ஸ்ரீராமர் உற்சவ மூர்த்தி

அயோத்தி, ஸ்ரீராம ஜென்மபூமியில் அமையவுள்ள பிரமாண்டமான ஸ்ரீராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ராமர் கோயிலுக்காக உற்சவ மூர்த்திகளான ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் உற்சவ விக்கிரகங்கள் பஞ்சலோகத்தால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள், ஹிந்து பரிரக்ஷண சமிதியின் சார்பில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விக்ரகங்களுக்கு, முதல் முறையாக சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வேங்கடேச பெருமாள் கோயிலில், 16 புண்ணிய நதிகளின் நீருடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் அரங்கில் பொதுமக்கள் தரிசனத்துக்காக இந்த உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீராமருக்கு நாம சங்கீர்த்தனம், பஜனைகளை நடத்தி வழிபாடு செய்தனர். இந்த உற்சவர் சிலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க உள்ளன. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது இவை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என ஹிந்து பரிரக்ஷண சமிதி அமைப்பினர் தெரிவித்தனர்.