ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

ஆப்கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 25 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் மீண்டும் பாரதத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளது. அவர்களால் பாரதத்திற்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழலில்,அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தது சற்றே சிந்திக்கத்தக்கது.

தமிழகத்தில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் முடிவு மிகவும் ஆபத்தானது. அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, பாரதத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ.கட்சி உட்பட பல முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் அனைத்து ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இவர்களுக்கு ஆயுள் தண்டனை  எதற்காக  வழங்கப்பட்டது, பல ஆண்டுகள் பல நீதிமன்றங்களில் தீர விசாரித்துதானே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது? இவர்களை ஒட்டு மொத்தமாக எந்த விசாரணையும் இன்றி ஒரே நாளில் விடுவிக்க ஒரு மாநில முதல்வருக்கு சட்டம் ஏன் உரிமை கொடுக்க வேண்டும்? அப்படியெனில் நீதிமன்றங்கள் எதற்கு?

மத ரீதியாக திட்டம்போட்டு பல அப்பாவி மக்களை குண்டு வீசி கொன்றவர்கள், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, அவரது பாதுகாவலர்கள், அப்பாவி பொதுமக்கள் என பலரையும் திட்டம் போட்டு மனித வெடிகுண்டை வைத்து கொன்றவர்களை எல்லாம் வெளியில் விட்டால் ஆபத்து என்பது முதல்வருக்குத் தெரியாதா? சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர், சட்டம் ஒழுங்கு சீர்கெட செயல்படுவது முறையா?

ஒரு தலைவர் பிறந்தநாளில் பிற மனிதர்களுக்கு, பிற உயிர்களுக்கு, தேசத்திற்கு நன்மை செய்பவர்களை பாராட்டி பரிசளித்து ஊக்குவித்தால் அது பலருக்கும் உத்வேகம் அளிக்கும். அதைவிடுத்து ஈவு இரக்கமின்றி, பலரை கொடூரமாக கொலை செய்து, அவர்கள் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியவர்களை விடுப்பது எந்த வகையில் நியாயம்? இதுதான் சமூக நீதியா?

பாரதத்தின் பல பகுதிகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி பயங்கரவாதிகளை அடக்கிய ஒருவரை தமிழகத்திற்கு ஆளுனராக மத்திய அரசு அனுப்புகிறது என்றால், அது தி.மு.க அரசின் இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாகத்தான் இருக்கும் என்பது திண்ணம்.