பாரதத்தின் முன்னணி வழக்கறிஞரும், அரசியல்வாதியுமானவர் ராம் ஜெத்மலானி. இவர் பாரத சட்ட அமைச்சராகவும், பாரத வழக்கறிஞர் கழகத்தின் தலைவராகவும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கழகத் தலைவராகவும் பணியாற்றினார். பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் பங்கேற்று விமர்சனங்களை எதிர்கொண்டார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெத்மலானி தனது 17வது வயதில் சட்டப் பட்டப்படிப்பை முடித்து, சிக்கார்பூரில் வழக்கறிஞராக பாரத பாகிஸ்தானிய பிரிவினை வரை பணியாற்றினார். 1947ல் பாரத பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்திலிருந்து தப்பிப் பிழைத்து மும்பைக்கு வந்தார். மும்பை உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும் வழக்கறிஞராக பணியாற்றினார்.
அடல் பிகாரி வாஜ்பாயின் முதலாவது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் வாஜ்பாயை எதிர்த்து 2004ல் லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். பின்னர் 2010ல் மீண்டும் பா.ஜ.கவில் இணைந்து மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இவர் பல சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
1988ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மீது போஃபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டு வந்தது. அப்போது ராஜீவ் மீது கடுமையான ஊழல் குற்றச் சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி பேசி வந்தார். ராஜீவ் காந்தி, இவரை ‘குரைக்கும் நாய்’ என்று சொன்னார். அதற்கு ஜெத்மலானி ‘ஆம், நான் குறைக்கும் நாய்தான். திருடர்களை பார்த்து குரைக்கும் நாய்’ என்று காட்டமாக பதில் அளித்தார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கும் அடாவடிக்கும் சொந்தகரரரான இவர் எக்கட்சியிலும் நிரந்தரமாக இல்லை. சொந்த கட்சிக்காரர்கள் தவறு செய்திருந்தால் அதை தைரியமாக தட்டி கேட்ககூடிய நேர்மையான மனோநிலை கொண்டவர். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் நெருக்கமான நட்புறவை வளர்த்துக் கொண்டவர். சிவசேனை கட்சியின் சார்பாகவும் பா .ஜ.க சார்பாகவும் கடைசியாக ஐக்கிய ஜனதாதளத்தின் சார்பாகவும் ராஜ்யசபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
தனது வக்கீல் தொழிலில் தானே ராஜா என்பதனை நிருபிக்க பலமுறை சிக்கலான சர்ச்சைக்கிடமான வழக்குகளில் எதிர்தரப்பு வழக்கறிஞராக பங்கேற்று தனது வாத திறமையால் வழக்கை ஒன்றுமில்லாமல் போக செய்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கிலும், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவாக வாதாடியுள்ளார்.