நீட் தற்கொலைகள்

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தி.மு.க, நீட் தேர்வை நீக்க முடியாது என தெரிந்திருந்தும், நீட்டை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும், ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என்ற பொய் வாக்குறுதியால், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை தவறாக வழிநடத்தினர். அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கண்டிப்பாக நீட் தேர்வை எழுத வேண்டும் அதற்கு தயாராகவும் என்று கூறாமல், முயற்சிக்கிறோம், நல்ல முடிவு கிடைக்கும் என்று வறட்டு வாதம் புரிந்தனர்.

நீட் தேர்வை ஏற்கனவே இரண்டு முறை எழுதி தோல்வியடைந்து, மூன்றாம் முறையாக தேர்வெழுத பயந்த சேலம் மாவட்டம் கூழையூர் கிராமத்தை தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன்பு மாணவி அனிதாவையும் இதேபோல, கடைசிவரை உச்ச நீதிமன்றம்வரை கொண்டுசென்று, தவறாக வழிநடத்தி அவரின் சாவுக்கு காரணமானது தி.மு.க.

அன்று மாணவியின் சாவை அரசியலாக்கி, ஆதாயம் தேடிய தி.மு.க, தற்போது அதனை சாதாரணமாக கடந்து செல்ல முயல்கிறது. அவர்களின் பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒன்றாகவும், எதிர் கட்சியானபோது வேறாகவும் உள்ளது. அ.தி.மு.கவும், தி.மு.க செய்த அதே அனுதாப அரசியலை இன்று கையிலெடுக்கிறது. ஒரு மாணவரின் சாவை அரசியலாக்கும் திராவிட கட்சிகள், ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என நிருபிக்கின்றன. தற்கொலையை தூண்டும் விதமாக லட்சக்கணக்கில் பணம் தந்து, தவறான முன்னுதாரணம் நிகழ்த்தப்படுகிறது.

அனைத்து போட்டி தேர்வுகளுமே மாணவர்களுக்கு பயம் ஏற்படுத்தத்தான் செய்யும். 10வது, 12வது ஆண்டுத் தேர்வு முடிவுகள் வெளியானததும், தோல்வி, மதிப்பெண் குறைவுகளால் ஒவ்வோர் ஆண்டும் இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காக அத்தேர்வுகளை நடத்தாமல் இருக்க முடியுமா? மாணவர்களின் பயத்தை போக்க, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான பயிற்சிகளை அரசு வழங்க வேண்டும்.

பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் நிலை அறிந்து செயல்பட வேண்டும். தங்கள் ஆசையை செயல்படுத்தும் இயந்திரமாக அவர்களைக் கருதக்கூடாது. அதை கற்க வேண்டும், இதை கற்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. பிள்ளைகள் முயற்சித்தும் தோல்வியடைந்தால் அதற்கு இணையான எத்தனையோ படிப்புகள் உள்ளது, அதனை கற்றுத் தேற உற்சாகப்படுத்த வேண்டும்.

மாணவர்களும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கமே என்பதை உணர வேண்டும், தோல்வியில் துவளாமலும் வெற்றியில் குதிக்காமலும் இருக்க வேண்டும். அதுவே, வாழ்க்கையில் இன்பம் துன்பம் இகழ்ச்சி புகழ்ச்சி அவமானம் என அனைத்தையும் சரிசமமாக ஏற்று வாழ்வில் முன்னேற வழிவகை செய்யும்.