போர்க்கப்பல்கள் ஏற்றுமதி

பாரதத்தின் முன்னனி கப்பல் கட்டும் நிறுவனமான ‘கார்டன் ரீச்’ (ஜி.ஆர்.எஸ்.இ) கப்பல் கட்டும் நிறுவனம் தற்போது பிரான்சின் ‘நேவல் குரூப்’ நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த இரு நிருவனங்களும் இணைந்து போர்க்கப்பல்களை தயாரித்தும் மேம்படுத்தியும் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளன. தற்போது பாதுகாப்பு அமைச்சக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஜி.ஆர்.எஸ்.இ தளம் நமது இந்திய கடற்படை, கடலோர காவல் படைக்கு போர்க் கப்பல்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலமாக இனி உலக நாடுகளின் கடற்படைக்கு ஏற்ற போர்க்கப்பல்களை தயாரித்து இரு நிறுவனங்களும் வழங்கும். ஜி.ஆர்.எஸ்.இ இதுவரை பாரதம், வெளிநாட்டு படைகளுக்காக 100க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை கட்டியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கப்பல் கட்டும் துறையில் தமக்கு இருக்கும் படிப்பினைகள், தொழில்நுட்பங்கள் மூலம் உலகத்தரம் வாய்ந்த போர்க்கப்பல்களை தயாரித்து வழங்க உள்ளன.