ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அப்போது, சில கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இடம் ஒதுக்கும்படி சபாநாயகரிடம் கோரினர். சபாநாயகரும் அவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவையில் ஒரு அறையை ஒதுக்கினார். இதற்கு பா.ஜ.க எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களுக்கும் ‘ஹனுமன் சாலிசா’ பாட வசதியாக வளாகத்தில் இடம் ஒதுக்கக் கோரினர். தற்போது, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் தொழுகை நடத்த இடம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார் பைரவ் சிங் என்பவர். ஜார்கண்டின் முன்னாள் முதல்வரும் பா.ஜ.க மூத்த தலைவருமான பாபுலால் மராண்டி,‘‘சட்டப்பேரவை என்பது ஜனநாயகத்தின் கோயில் போன்றது. இதை ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்காக மாற்றிவிடக் கூடாது. இதன்மூலம், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை ஒரு தவறான கலாச்சாரத்துக்கு வழிவகுக்கிறது. எனவே, இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், பா.ஜ.க சார்பில்போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.