அவசரகால தரையிறக்கப் பயிற்சி

இன்று காலை 9 மணி அளவில் ராஜஸ்தானின் பார்மரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை NH 924A வில் இந்திய ராணுவ விமானங்கள் ஒரு அவசர தரையிறக்கப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளன. இதில் முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த விமானப்படையின் விமானங்களில் பயணிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத போர் விமானங்கள் மற்றும் பிற விமானங்களின் அவசர தரையிறக்கங்களைக் கையாளத் தயாராக 3.5 கி.மீ நீளமுள்ள ஏர் ஸ்ட்ரிப், நான்கு விமானங்களுக்கான பார்க்கிங், ஒரு ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் டவர் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இடம் பாரத பாகிஸ்தான் எல்லையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் இந்த அவசர தரையிறங்கும் பகுதி தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவசர தரையிறங்கும் ஏர் ஸ்ட்ரிப் பொருத்தப்பட்ட இரண்டு விரைவுச் சாலைகளை மத்திய அரசு ஏற்கனவே  நிர்மாணித்துள்ளது. தேசமெங்கும் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட், உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோல 29 தடங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.