சுவாமி சிவானந்தர் ரிஷிகேஷில் வாழ்ந்த ஒரு ஹிந்து சமய வேதாந்த குரு. அவர் 1887 செப்டம்பர் 8ல் திருநெல்வேலி, பத்தமடையில் பிறந்தார். அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் குப்புசாமி. சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு என சிறந்து விளங்கினார். மருத்துவம் படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சைகள் செய்தார். பணிகளுக்கு இடையே சத்சங்கம், பஜனைகளில் ஈடுபட்டார்.
மலேஷியாவில் ஒரு நாள், ரப்பர் தோட்டத் தொழிளாளியான ஏழை பட்டியலினப் பெண் ஒருத்தி பிரசவ வேதனையால் துடித்தாள். உதவி செய்ய யாரும் இல்லை. செய்தி அறிந்த மருத்துவர் குப்புசாமி, உடனே அந்த பெண்ணின் குடிசைக்கு சென்று பணிவிடைகளைச் செய்தார். ஒரு பெண்ணின் உதவியுடன் பிரசவம் பார்த்தார். இரவு அங்கேயே தங்கி, தாயும் சேயும் நலமாக இருப்பதை உறுதி செய்த பிறகே குடிலுக்குத் திரும்பினார். தீண்டாமை தீவிரமாக இருந்த காலத்தில், பாரம்பரியமான ஓர் அந்தணக் குடும்பத்தில் பிறந்து, ஏழைப் பெண்ணுக்குத் தாயுமானவராக இருந்து உதவியவர் குப்புசாமி.
சில ஆண்டுகளில் ஆன்மீக நாட்டம் மேலோங்க, மருத்துவப் பணியைத் துறந்து பாரதம் திரும்பி கடுமையான தவத்தில் ஈடுபட்டார். ரிஷிகேஷில் தெய்வ நெறிக் கழகம் என்ற ஆசிரமம் தொடங்கினார். சுவாமி விஸ்வானந்த சரஸ்வனாதியை குருவாக ஏற்று, அவரிடம், `சுவாமி சிவானந்த சரஸ்வதி’ என்ற பெயரில் சந்நியாச தீட்சை பெற்றார். தவத்திலும் தியானத்திலும் ஈடுபட்டார்.
அப்துல் கலாமின் சிறு வயது கனவு விமானியாக வேண்டும் என்பது. ஆனால், விமானப் படையின் பைலட் தேர்வில் தோற்றதால் விரக்தி அடைந்தார். வாழ்நாள் கனவு சிதைந்து போனதை ரிஷிகேஷம் சென்று சுவாமி சிவானந்தரிடம் கூறினார். “நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல்” என்று அறிவுரை கூறினார் சிவானந்தர். `அந்தத் தருணம்தான் என் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம்’ என்று கலாம் அடிக்கடி குறிப்பிடுவார். பாரதத்தின் முன்னால் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம். உள்ளிட்ட வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த பலருக்கும் வாழ்வில் ஆன்மிக ஒளி ஏற்றியவர் சுவாமி சிவானந்தர்.
சுவாமி சிவானந்தர் போற்றிய ஆன்ம நேயத்தை நாமும் போற்றி, தொண்டு செய்வோம்…