அமெரிக்காவிலும் கனடாவிலும் வேகமாக வளர்ந்து வரும் புலம்பெயர்ந்த சமூகங்களில் ஒன்றாக ஹிந்துக்கள் உள்ளனர். புலம் பெயர்ந்த ஹிந்துக்களின் உறுதியான குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பாரம்பரியம், கல்வி, அன்பு, திறமை போன்றவைகளின் காரணமாக அவர்கள் வாழும் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் முழுமையாக ஒருங்கிணைகிறார்கள். ஆனால், பலரும் ‘ஹிந்து’ என்பதை ஒரு மதம் என்ற அளவில் மட்டுமே குறுகி பார்க்கின்றனர். அந்த குறுகிய எண்ணத்தை போக்கும் வகையில், ஹிந்து மதத்தின் பிரம்மாண்டம், பாரம்பரியம், நாகரிகம், பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில், அமெரிக்காவில் உள்ள ‘உலக ஹிந்து கவுன்சில்’ அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளது. இது கனடாவிலும் கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான கொண்டாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஏற்கனவே கைகோர்த்திருக்கின்றன; மேலும் பலர் இணைந்து வருகின்றனர். இந்த கொண்டாட்டம் அமெரிக்கா, கனடாவின் பல்வேறு பகுதிகளில், கலாச்சார நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்கள், இணையவழி கருத்தரங்குகள், மாநாடுகள், விழிப்புணர்வு பயணங்கள் என பல்வேறு வழிகளில் நடக்க உள்ளன. இந்த கொண்டாட்டங்களில் பெரும்பாலானவை கொரோனா சூழலால் மெய்நிகர் வழியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.