அஸ்திவார பணிகள் நிறைவு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது. 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக கடந்த மார்ச் மாதம் அஸ்திவாரம் அமைக்கும் பணி தொடங்கியது. சுமார் 40 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில், ‘ராமர் கோயில் அஸ்திவார பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஒரு வாரத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். கோயில் முழுவதும் கற்களால் கட்டப்பட உள்ளன. ஜெய்ப்பூரை சேர்ந்த சிற்பிகள், கற்களை செதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதான கோயில் கட்டுமானத்துக்கு 4 லட்சம் கியூபிக் அடி கற்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில்60,000 கியூபிக் அடி கற்களை செதுக்கும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது’ என தெரிவித்தார். குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த வாரிசுகள் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இக்குடும்பத்தினர் 15 தலைமுறைகளாக கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோமநாதர் கோயில் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 131க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட கோயில்களை இக்குடும்பத்தினர் கட்டியுள்ளனர். தற்போது சோம்புரா குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா தலைமையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. அவரின் 2 மகன்கள் நிகில், ஆசிஷ் ஆகியோர் தந்தையின் வழிகாட்டுதலில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.