ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு செயல்படும் பயலாஜிக்கல் – இ நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது கட்ட, மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சில நிபந்தனைகளுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் பத்து இடங்களில், 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இச்சோதனை நடத்தப்படும். 30 கோடி தடுப்பூசிகளை பெற பயலாஜிக்கல் – இ நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே ரூ. 1,500 கோடியை முன்பணமாக செலுத்தியுள்ளது.
இதற்கிடையில், பாரத் பயோடெக்கின் கோவக்ஸின் கொரோனா தடுப்பூசியின் 2, 3 ஆம் கட்ட குழந்தைகளுக்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் முடிவு செப்டம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது. ஜைடஸ் காடிலாவின் ஊசி இல்லாத கொரோனா தடுப்பு மருந்து ZyCoV-D ஏற்கனவே 12 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதற்கு அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) பெற்றுள்ளது. இது அக்டோபர் முதல் வாரத்திலிருந்து நிர்வகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.