சங்கத் தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, எளிய தொகுப்பாக வெளியிடப்படும். அதற்கு ‘திராவிடக் களஞ்சியம்’ என்று பெயர் சூட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் ‘திராவிட’ என்ற சொல் கிடையாது. தமிழ், தமிழகம் என்ற சொற்களே உள்ளன. வரலாற்று உண்மையை திரித்து சங்கத் தமிழ் நூல்களுக்கு ‘திராவிடக் களஞ்சியம்’ என்று சூட்டுவதில் உள்நோக்கம் இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அண்மைக் காலமாக தமிழ், தமிழர் போன்ற இயற்கையான சொற்களுக்கு மாற்றாக ‘திராவிட’ என்ற சொல்லைப் புகுத்துகிறார். தமிழக வளர்ச்சியைக்கூட அவர் ‘திராவிட மாடல்’ என்று பெயர் சூட்டினார். முதல்வராக பதவியேற்றவுடன் ‘நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்று அறிவித்துக் கொண்டார். தமிழர்களிடம் வாக்கு வாங்கும்வரை அவர்களின் அசல் இனப்பெயரைச் சொல்வது, வெற்றி பெற்ற பின்பு திராவிடத்தைத் திணிப்பது என்ற தந்திரம்தான் இது’ என பல தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, மத்திய அரசு திட்டங்கள், முந்தைய அ.தி.மு.க திட்டங்களுக்கு தனது ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரம் தேடிவந்த தி.மு.க அரசு, தற்போது தனது ஸ்டிக்கர் ஒட்டும் பணியை சங்க நூல்களிலும் புகுத்தியுள்ளதாக இணையதளவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.