பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து அதில் சூடாக்கினாள். சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் இந்த சோதனை? என்று நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை? என்று வருத்தப்பட்டேன்.

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள். அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைந்தார்கள். நான் திரவமாகி மோர் என்ற பேர் பெற்றேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதனை வெண்ணெய் என்றனர். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா? என்று ஏங்கினேன். ஆனால், அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள். பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன்.

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை? என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் 100 ரூபாயாம் என்றாள்.

ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசியதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாய்தான். ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே. இதை நினைக்கும்போது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை! என்றது அந்த நெய்.