மேற்கு வங்கத்தின் வடக்கு டம் டம் பகுதியில் நிம்தாவில் வசிக்கும் தமல் பட்டாச்சார்யா, ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள ராணுவ பள்ளியான கர்தான் சர்வதேச பள்ளியில் இயற்பியல், வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அவரை மத்திய அரசு பத்திரமாக தாயகம் மீட்டு வந்தது. ஆனால், நாடு திரும்பிய பிறகு அவர் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அவரது சமூக வலைத்தளப் பதிவில் அவர், தலிபான்கள் நம்பத்தகுந்தவர்கள், அவர்கள் என்னுடன் தோழமையாக பழகினர், கிரிக்கெட் விளையாடினர், உணவு கொடுத்து பார்த்துக்கொண்டனர் என தொடர்ந்து தலிபான்களை புகழ்ந்து வந்தார். அவர்களுடன் அவர் சகஜமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. இதனையடுத்து, ‘இந்த நெருக்கடியான நேரத்தில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட முழு உலகமும் போராடி வருகிறது. இந்நிலையில் தமல் பட்டாச்சார்யாவின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகிறது, அவரை அரசு விசாரிக்க வேண்டும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், அவர் பயங்கரவாதியாகக்கூட இருக்க வாய்ப்புள்ளது என சூரஜ் குமார் சிங் என்பவர் ஆதாரங்களுடன் மேற்குவங்க அரசின் உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை அம்மாநில உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.