கலவரம் தரும் ஆப்கன் நிலவரம்

ஆப்கனில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த ஒரிரு நாட்களில் அங்கு நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில், 13 அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதற்கு அனைத்து உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு சரணாலயங்களாக உள்ள அனைவருக்கு எதிராகவும் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்’ என பாரதம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிலர் ஜோ பைடன், ‘நாங்கள் மன்னிக்க மாட்டோம், மறக்க மாட்டோம். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்’ என்றார்.

கந்தஹார் விமான நிலையத்தில் அமெரிக்காவின் மதிப்புமிக்க பிளாக்ஹாக் ஹெலிகாப்டரை தலிபான்கள் டாக்ஸி போல தரையில் ஓட்டி மகிழும் வீடியோ சமீபத்தில் வெளியானது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், தலிபான்களால் அமெரிக்காவின் 85 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உயர்தர போர் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் M24 வகை ஸ்னைப்பர் துப்பாக்கிகள் உள்ளிட்ட 6 லட்சத்துக்கும் மேலான நவீன துப்பாக்கிகள், 75,000 ராணுவ வாகனங்கள், உலகிலேயே அதி நவீன UH-60 பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்கள் 45 உட்பட 200 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள், விமானங்கள், நைட் விஷன் காமிரா, கவசங்கள் என பலவும் உள்ளன.

இவைகளை தலிபான்கள் பயன்படுத்துவதும் அவற்றை பாகிஸ்தான், ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பதும் உலகிற்கே ஆபத்துதான். தங்களுடைய நவீன ஆயுதங்களை இவ்வளவு எளிதில் தலிபான்களிடம் ஒப்படைத்த அமெரிக்கா உலக அளவில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இவற்றைவிட முக்கியமாக, அமெரிக்க குடிமக்கள், ஆப்கானிய கூட்டாளிகள், கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள், நேட்டோ நாட்டினர் விவரங்கள், தங்களுக்கு உதவியவர்கள் என அனைவரின் கைரேகைகள், விழித்திரை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களையும் தலிபான்களிடம் அமெரிக்கா பறிகொடுத்துள்ளது. இது அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க நட்பு நாடுகள் அனைத்திற்குமே மிக மிக ஆபத்தானது என பொலிடிகோ பத்திரிகை மூத்த ராணுவ வல்லுனர்களை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.