அர்ச்சகர்கள் நியமனம் தடை வழக்கு

வேத கல்வி அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலர் முத்துகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததார். அதில், கடந்த, 2021 ஜூலையில், கோவில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பரிச்சாரகார் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் வெளியிடப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ள அர்ச்சகர்களை நீக்கும் நோக்கிலேயே இவ்விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

அர்ச்சகராக நியமிக்க ஓராண்டு வகுப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருந்தால் போதும் என அரசு கூறுகிறது. ஆகமத்தில் அனுபவம் பெற்றவர்கள் சான்றிதழ் வகுப்பு படிப்பது இல்லை. அவர்கள் இளம் வயதிலேயே குருவிடம் தீட்சை பெற்று, குறைந்தது மூன்று ஆண்டுகள் வேத கல்வி பயில்வார்கள். அர்ச்சகராகும் முன், பூஜை, ஹோமம் செய்வதற்கான பயிற்சியை ஐந்து ஆண்டுகள் எடுப்பர். இது, சிவாச்சாரியார்களின் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதல். எங்களின் உரிமைகள் செல்லத்தக்கது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. இப்பணியிடங்களில் நியமனம் செய்ய, நிர்வாக அதிகாரி, உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை. சட்டப்படி, அறங்காவலருக்குத் தான் அதிகாரம் உள்ளது.

எனவே, அறநிலையத்துறை ஊழியர்கள் பணி விதிகளில், எனவே, சிவாச்சாரியாளர்களின் உரிமைகளை மீறும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்களை நியமிக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும். அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, செப்டம்பர் 1ல் விசாரணைக்கு வர உள்ளது. அதில் இவ்வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்தது.