திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருச்செங்காட்டங்குடியில் 1908ல் பிறந்தார். சிவத்தொண்டு புரிந்து வரும் ஓதுவார் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயில்களில் தந்தை பாடும்போது உடன் இருந்த இவருக்கும் இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. சடையப்ப பிள்ளை, மாணிக்க தேசிகர் ஊளிட்டோரிடம் இசைப்பயிற்சி பெற்றார்.
சங்கீத அரங்கேற்றம் திருமருகல் ராமர் கோயிலில் நடைபெற்றது. தனது 18வது வயதில் மதுரையில் நடந்து வந்த தேவாரப் பாடசாலையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இசை என்பது ஒரு சிலர் பாடி, கேட்டு ரசிக்கும்படியாக மட்டும் இருக்கக் கூடாது, சாதாரண மக்களும் இசையைக் கேட்டு புரிந்து ரசிக்க வேண்டும் என்று கருதியவர் தேசிகர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது ‘தமிழ்ப் பாமாலை’ என்ற நூலை வெளியிட்டார். திருக்குறளுக்கு முதன்முதலாக இசை அமைத்து, அதை இறைவணக்கமாகப் மேடையில் பாடியவர் என்ற பெருமை பெற்றார். கர்நாடக இசையில் அமைந்த பல கீர்த்தனைகளையும் இவர் புனைந்துள்ளார். 1935ல் இவரது பாடும் திறனால் கவரப்பட்ட வேல் பிக்சர்ஸ் அதிபர்கள் இவரைப் ‘பட்டினத்தார்’ படத்தில் நடிக்க வைத்தனர். இதில் பெரும்பாலான பாடல்களை இவரே பாடினார்.
நந்தனார், வள்ளாள மகாராஜா, தாயுமானவர், மாணிக்கவாசகர், திருமழிசை ஆழ்வார் உள்ளிட்டப் பல திரைப்படங்களில் பாடி நடித்துள்ளார். தனது வெண்கலக் குரலில் திரைப்படங்களில் இவர் பாடிய ஜகஜனனீ, என் அப்பன் அல்லவா, வழிமறித்து நிற்குதே, காண வேண்டாமா,… உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன.
சங்கீத சாகித்திய சிரோமணி, சங்கீத கலாசிகாமணி, இசைப்பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, ஐந்தாம் தமிழ்ச் சங்கம் விருது உள்ளிட்ட பல பட்டங்கள், விருதுகள் பெற்றுள்ளார். தேவாரப் பாடல்களையும் திருமுறைகளையும் பாடி இசைத் தட்டுகளாக வெளியிட்டார். இசையின் பல்வேறு நுணுக்கங்களை ஆழ்ந்து ஆராய்ந்து இடைக்கால இசை, இயலும் இசையும், இசையும் நாடகமும் உள்ளிட்ட பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ‘ஐந்தாம் தமிழ்ச் சங்கம்’ என்றெல்லாம் புகழப்பட்டவரும் தமிழகத்தின் தலைசிறந்த சங்கீத வித்வான்களில் ஒருவருமான எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1972-ம் ஆண்டு, ஜூன் மாதம், 64-வது வயதில் மறைந்தார்.