கொரோனா தொற்று குறைந்தாலும் பாரதத்தில், அதன் 3வது அலை பரவும் அபாயம் இன்னமும் உள்ளது என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். முன்னதாக, கொரோனா 3வது அலை ஆகஸ்ட்டில் துவங்கி, வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனினும் 2ம் அலையை போல இது மோசமாக இருக்க வாய்ப்பில்லை என, ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் ஜூலையில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்,) பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில், ‘கொரோனாவின் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம்’ எனத் தெரிவித்துள்ளது. ‘தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல், முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி, சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்தல், கூட்டத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட தடுப்பு நடைமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றினால்தான் 3வது அலை பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்’ என, மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.