மத்திய அரசினால் நிர்வகிக்கப்படும் ‘நௌ இந்தியா’ இணையதளம் (KnowIndia.gov.in) இடைக்கால வரலாற்றின் கீழ் முகலாய சாம்ராஜ்யம் என்ற தலைப்பில், பாரதத்தை ஆண்ட முகலாயர்களின் ஆட்சியை ‘மிக சிறந்த ஆட்சி’’ என்று பாராட்டியுள்ளது. அதில் ஔவுரங்கசீப், அக்பர், பாபர் போன்றவர்கள், மதச்சார்பற்ற, சகிப்புத்தன்மையுள்ள, நல்ல ஆட்சியாளர்களாக பாராட்டப்பட்டுள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக அவர்களை எதிர்த்து போராடிய ரஜபுத்திரர்கள், சிவாஜி உள்ளிட்ட மராட்டியர்கள், அஹோம்கள் உள்ளிட்டோர் குறித்த குறிப்புகள் இடம்பெறவில்லை. கொடுங்கோல் முகலாயர்களின் கொடூரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவர்களால் கொல்லப்பட்ட ஹிந்துக்கள், அழிக்கப்பட்ட ஹிந்து ஆலயங்கள், வாள்முனை மதமாற்றங்கள், அதற்காக உயிரைவிட்ட ஹிந்து, சீக்கிய குருமார்கள் உள்ளிட்டோரின் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. சீக்கிய குரு அர்ஜன் தேவ் தூக்கிலிடப்பட்டதாக ஒரே ஒரு குறிப்பு அதுவும் தெளிவற்ற முறையில் உள்ளது.
மாறாக, ஜஹாங்கீர் சமூகத்தை சீர்திருத்த முயன்றார், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருந்தார். முழு துணைக்கண்டத்தையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற தனது கனவை ஔரங்கசீப்பால் நிறைவேற்ற முடியவில்லை என அனைத்தும் ஒருசார்புத் தகவல்களாகவே இடம்பெற்றுள்ளன. உண்மையான வரலாறுகள் சிதைக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த செயல்பாட்டினை பல நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ரத்தன் சாரதாவும் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். தவறான தகவல்கள் நீக்கப்பட்டு பாரதத்தின் உண்மையான வரலாற்றை மக்கள் அறிய செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.