அம்பாளைக் கொண்டாடக் கூடிய மாதம் ஆடி மாதம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று மகாவிஷ்ணு அருளினார். அதேபோல், ’மாதங்களில் நான் ஆடி’ என்கிறாள் மகாசக்தி. அப்பேர்ப்பட்ட ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான பண்டிகை வரலட்சுமி விரதம்.
பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ஹிந்து தர்மத்தில், சுமங்கலிப் பெண்கள் சேர்ந்து செய்யும் விசேஷ பூஜைகளில் ஒன்றுதான் வரலட்சுமி விரதம். நம்முடைய ஹிந்து தர்மத்தின் ஆணிவேர்களாகத் திகழ்பவர்கள் பெண்கள். ஒரு வீட்டில் நடைபெறும் நல்ல காரியங்களுக்கு நாள் குறிக்க வேண்டும் என்றால், கிரகலட்சுமியாக இருக்கும் அந்த வீட்டுப் பெண்ணின் நட்சத்திரத்தை வைத்துத்தான் நாள் குறிக்க வேண்டும்.
வேண்டும் வரத்தை அருள்பவள் வரலட்சுமி. அஷ்டலட்சுமிகளின் ஐக்கிய ஸ்வரூபமே வரலட்சுமியின் திருவடிவம். வரலட்சுமியை விரதமிருந்து பூஜித்தால், குடும்பம் குறைவின்றி சிறக்கும். கணவர் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறுவார். குழந்தைகளுக்கு அனைத்து பேறுகளும் சித்திக்கும். நித்திய சுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள், கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவள். அவ்வாறு பெண்களை காப்பதற்காகவே, இந்த வரலட்சுமி விரதத்தன்று தன்னை வழிபடும் பெண்களின் வீட்டிற்கு சென்று குடிகொள்கிறாள்.
முற்காலத்தில் மகத நாட்டின் குந்திணா என்ற கிராமத்தில் வசித்த சாருமதி என்ற பெண்ணின் கனவில் மகாலட்சுமி தோன்றி, வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கும்படியும், அதன் பலனாக வேண்டிய அனைத்தையும் அருள்வதாகவும் கூறினாள். சாருமதியும் அந்தக் கனவைப் பற்றித் தன் கணவரிடமும், புகுந்த வீட்டினரிடமும் தெரிவித்தாள். அவர்களின் ஒத்துழைப்போடு கிராமத்தில் இருந்த மேலும் சில சுமங்கலிப் பெண்களும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்தனர். அதனால் தாங்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் பெற்றனர் என்று வரலட்சுமி விரத மகாத்மியம் கூறுகிறது.
இந்த விரதத்தை ஆண்டுதோறும் கடைப்பிடித்துவந்தால் மனதில் எப்போதும் ஆனந்தம் நிலைத்திருக்கும். குறைவற்ற செல்வம், புத்திரபாக்கியம், ஆரோக்கியம், நினைத்தது நிறைவேறுதல் என அவரவர்க்கு ஏற்ப வரலட்சுமி வரமாக அருள்வாள். ஸ்ரீசூக்தம், மகாலட்சுமி அஷ்டகம் கனகதாரா ஸ்தோத்திரம் என்று நமக்குத் தெரிந்த ஸ்லோகங் களைப் பாராயணம் செய்யலாம்.