மேற்கு வங்கத்தில், பாரதத்தின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டிற்கும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘யுவ சங்கல்ப்’ என்ற யாத்திரையை, பா.ஜ.கவின் யுவ மோர்ச்சா பிரிவுத் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 75 யுவ மோர்ச்சா தலைவர்கள் தலைமையில் 75 கி.மீ பேரணியை 75 இடங்களில் தொடங்கி நடத்திட முடிவு செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ கைது:
இதற்காக புறப்பட்ட சிலிகுரி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கோஷ் உட்பட 30க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினரை மேற்கு வங்க காவல்துறையினர் அவர்களது கட்சி அலுவலகத்தில் கைது செய்தனர். இந்த பேரணிக்கு அனுமதி பெறப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாராயணி சேனாவினர் கைது:
மற்றொரு சம்பவமாக, பா.ஜ.க எம்.பி.யும், சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தில் மத்திய இணை அமைச்சருமான ஜான் பர்லாவை வரவேற்க பாக்தோக்ரா விமான நிலையத்திற்கு வந்த நாராயணி சேனா தொண்டர்கள் 35 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜூ பிஸ்தா கருத்து:
டார்ஜிலிங்கைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பியும், தேசிய யுவ மோர்ச்சா பொதுச்செயலாளருமான ராஜூ பிஸ்தா, ‘தேசத்திற்கும் தேசத்தலைவர்களை மரியாதை செய்யவும் நடத்தப்பட்ட இந்த யாத்திரையை தடுத்ததன் மூலமாக, மேற்கு வங்க அரசும் மாநில காவல்துறையும் தேச விரோதிகள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் மமதா அறிவித்த ‘கேலா ஹோப்’ நிகழ்ச்சியில் எவ்வித அனுமதியும் இன்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருணமூல் கட்சித் தொண்டர்கள் ஒன்று கூடினர். அதனை காவல்துரையும் அரசும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தேசத்திற்கு மரியாதை செய்வதை அவர்கல் தடுக்கின்றனர்’ என்று குறிப்பிட்டார்.