சென்னை, மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் முன்னாள் அறங்காவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து, அந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டதாக அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக அளிக்கப்பட்ட காரணங்களில் ‘சட்ட விதிகளுக்கு முரணாக கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, அறங்காவலர் குழு தலைவர் பதவி வகித்தது, கோவிலின் சொத்துப் பதிவேட்டின்படி முறையாக பராமரிக்கவில்லை, சொத்துக்களை பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை, கோவில் இடங்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்யவில்லை, இதனால், கோவிலுக்கு வருவாய் இழப்பு’ என்பது சில.
தவறுகள் இருந்தால், அது நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க உதவலாம். அதனை விடுத்து கோவிலை வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்துவது முறையா? என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது போன்ற முறைகேடுகள், அனேகமாக ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைபெற்றுக் கொண்டுதானே உள்ளது. மேலும், கபாலீஸ்வரர் கோவில் உட்பட சுமார் 60 கோவில்களில் செயல் அலுவலர் நியமன உத்தரவு இன்றி அரசு இயக்குகிறதே, 1951, 1965ம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம், ஸ்ரீரங்கம், பழனி, திருவாரூர் உட்பட 45 கோவில்களை அரசு நிர்வகிக்க போட்ட அரசாணையை ரத்து செய்துள்ளது. எனினும், இன்றுவரை அரசே இக்கோவில்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதே?
கோவில் பணத்தை கோவிலுக்கு செலவழிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அதனை கொரோனா நிவாரணப் பணிகள், அதிகாரிகளுக்கு கார், டீசல் என அரசே முறைகேடாக செலவழித்துள்ளதே? கோவில்கள் அதன் சொத்துக்களை பாதுகாக்காமல் அவற்றில் திருட்டு, ஊழல், முறைகேடுகள் நடக்கவிட்டுள்ளதே, ஒருவேளை பூஜைகூட இல்லாத கோவில்கள் இன்னமும் இருக்கின்றனவே, ஹிந்து அற நிலையத்துறையில் மாற்று மதத்தினருக்கு வேலை, ஹிந்துக்கள் உணர்வுகளை மதிக்காமல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆணை, கோவில்களின் தங்கத்தை உருக்குவது, வடபழனி கோவில் நிலத்தை மாற்று மதத்தினருக்கு தாரை வார்ப்பது என அரசே தவறான முன்னுதாரணமாக செயல்படலாமா?
பல ஆண்டுகளாக இது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்து வரும் திராவிட அரசுகள், இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகின்றன?
மசூதிகளின் சொத்தை வக்பு வாரியம் நிர்வகிக்கிறது, சர்ச்சுகளின் சொத்தை மறைமாவட்ட நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது. அதுபோல, ஹிந்து கோவில்களை ஹிந்து அமைப்பினரிடம் ஒப்படைத்துவிட்டு தமிழக அரசு தனது மாநில நிர்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்தலாமே? சிந்திப்பார்களா?
மதிமுகன்