ராணி அகல்யா பாய் ஹோல்கர்

இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர் மராட்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய பெயர். இவர் மராட்டிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டி முகலாயர்களுக்கு எதிராக போராட எழுச்சி தந்தவர். இவர் கொடுத்த ஆதரவில்தான் மகாஜி ஷிண்டே மராட்டிய சாம்ராஜ்யத்தை சூழ்ச்சிக்காரர்களின் பிடியிலிருந்து காத்தார். இவர் ஆட்சி காலத்தில் நகர மக்கள் போற்றும் வகையில் நல்ல சாலைகளும் கல்விக்கூடங்களும் மருத்துவமனைகளும் அமைத்துள்ளார்.

இவர் சிவபெருமானின் தீவிர பக்தர். ‘சதுர்தாம்’ என்ற நான்கு சிவ வழிபாட்டுத் தலங்களை மிக நேர்த்தியாக தேர்ந்தெடுத்து அமைத்திருக்கிறார். நாற்பத்து மூன்று தீர்த்தக் குளங்களை ஏற்படுத்தியிருக்கிறார். துவாதச லிங்க க்ஷேத்திரங்கள் என்று 97 வகைப்பட்ட ஆலயங்களை கட்டிய பெருமை இவரையே சேரும். அதுமட்டும் இல்லாமல், இந்த ஆலயங்களை பராமரிக்கவும், அன்றாட வழிபாடுகள் நடைபெறவும் பல லட்ச ரூபாயை வாரி வழங்கியுள்ளார் ராணி அகல்யாபாய்.

தீவிர சிவபக்தையான இவர், அன்றாடம் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணிக்கு நர்மதை நதியிலிருந்து மண் எடுத்து வந்து ஒரு கோடி லிங்கத்தைப் பிடித்து,  அந்தணர்களை கொண்டு ருத்ர ஜபம் ஜபித்து, வழிபாடுகள் செய்து, பகல் நேர உச்சி வேளையில் நர்மதை நதியில் கரைத்து விடுவார். இந்த புனிதக் கைங்கரியம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை ‘கோடிலிங்கார்கனம்’ என்று அழைக்கின்றனர்.

ராணி அஹல்யாபாயின் தர்பார் மண்டபம் 108 ருத்ராட்ச லிங்கம், நவமணிகளின் ஒவ்வொரு ரத்னத்திலும் கட்டை விரல் அளவு சிவலிங்கங்கள், நர்மதை நதியில் இருக்கும் மார்பிள் கல்லைக் கொண்டு செய்யப்பட்ட பாண லிங்கங்கள் என்று, அற்புத கைலாயமாக தெய்வீக அம்சங்களோடு அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கும், காசி விஸ்வநாதருக்கும் அன்றாடம் காசி தீர்த்தமும், கோடி தீர்த்தமும் அபிஷேகங்களுக்கு கொண்டு சேர்ப்பிக்க வழிவகுத்த மாபெரும் புண்ணியவதி இவர். இவரால் புணரமைக்கப்பட்ட இன்றைய காசி விஸ்வநாதர் கோவில், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ஆயிரக் கணக்கான கோவில்கள் உள்ளவரை இவர் புகழ் அழியாது என்பது திண்ணம்.