வெளிமாநில தொழிலாளர்களுக்கு வாடகை வீடு

கொரோனா முதல் அலையின்போது வேலையின்மை, உணவு பிரச்சனை காரணமாக ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அவர்களுக்கு வேலை செய்யும் மாநிலத்திலேயே தங்கும் வசதி ஏற்படுத்தித் தர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, அனைத்து மாநிலங்களிலும், வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கான வாடகை வீட்டு வசதி திட்டம் (ARHC) செயல்படுத்த முடிவு செய்தது. இந்த புதிய திட்டத்தின்படி, பல்வேறு மாநிலங்களில் அரசு நிதியில் கட்டப்பட்டு காலியாக உள்ள 5,734 வீடுகள் முதற்கட்டமாக அவர்களுக்கு வாடகைக்கு விடப்படும். மேலும், தனியார் பங்களிப்புடன், 400 முதல் 600 சதுர அடி பரப்பளவுகளில் வீடுகள் கட்டப்படுகின்றன. இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கான வாடகை குறைந்தபட்சம் 3,000 ரூபாயில் இருந்து துவங்கும். ஐந்து ஆண்டுகளில் 8 முதல், 20 சதவீதம் வரை, படிப்படியாக உயர்த்தும் வகையில் கட்டணங்கள் இருக்கும். இதற்கான உயர்நிலைக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.