இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) வருடாந்திர கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘இந்த சி.ஐஐ. கூட்டம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவத்தின்போது நடைபெறுகிறது. பாரதத் தொழில்துறையில் புதிய இலக்குகளை அடைய இது ஒரு பெரிய வாய்ப்பு. ஆத்ம நிர்பர் வெற்றிக்கு தொழில்துறையின் பங்கு இன்றியமையாத்து. கொரோனா தொற்றின் போதும் புதிய முயற்சிகளுடன் தொழில்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர். இன்றைய புதிய பாரதம், புதிய உலகத்துடன் அணிவகுக்கத் தயாராக உள்ளது. ஒரு காலத்தில் அன்னிய முதலீட்டை கண்டு பயந்த பாரதம், இன்று அனைத்து வகையான முதலீடுகளையும் வரவேற்கிறது. விரக்தியைத் தூண்டும் வகையிலான வரிக் கொள்கைகள் திருத்தப்பட்டுள்ளன. வெறும் வாழ்வாதாரமாக கருதப்பட்ட விவசாயம், தற்போது நவீன சீர்திருத்தங்கள் மூலம் சந்தைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு பிராண்டுகள்கூட வெளிநாட்டு பெயர்களுடன் விளம்பரப்படுத்தப்பட்டன. இன்று நிலைமை மாறிவிட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க மக்கள் விரும்புகின்றனர். எனவே, பாரத இளைஞர்கள் புதிதாக களத்தில் நுழையும் போது, அவர்களுக்கு தயக்கம் தேவையில்லை’ என்று கூறினார். இக்கூட்டத்தில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வரும் பிரதமரின் உறுதிப்பாட்டை தொழில்துறையினர் பாராட்டினர்.