ஆகஸ்ட் 15 – தெருக்கள் தோறும் தேசியக் கொடி ஏற்றுவோம்

தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
– மகாகவி பாரதி

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பொழுது போக்கு அம்சங்கள் அடங்கிய அலைபேசி, தொலைக்காட்சி போன்றவை நம் வீட்டில்  இருந்தும் நம்மால் வீட்டுக்குள்ளேயே தனிமையாக இருக்க முடியவில்லை.
இதைப் படித்துக் கொண்டிருக்கும் இன்றிலிருந்து 75 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்றோம்.  நாம் சுதந்திரம் பெற காரணமானவர்கள் தனிமைச் சிறையில், இருட்டு அறையில், சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளானார்கள்.

அவர்கள் தங்கள் சுயநலத்தை மறந்து தேச நலனையே பெரிதாக நினைத்ததால்  பெற்றதே நம் நாட்டு சுதந்திரம்.

“காந்தித் தாத்தாவும் நேரு மாமாவும் கடைக்கு போய் கடலை மிட்டாய் வாங்கி வந்தது போல பெற்றதல்ல நம் நாட்டு சுதந்திரம்”. மாறாக ஆங்கிலேயரிடம் அடிபட்டு, மிதிபட்டு பெயர் தெரியாமல், உருவம் தெரியாமல் நாட்டு விடுதலைக்காக மறைந்து போனவர்கள் ஆயிரமாயிரம் பேர்.

“உங்கள் ரத்தத்தை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரம் பெற்று தருகிறேன்” என்றார் மாவீரன் நேதாஜி அவர் கொடுத்த அறைகூவலை ஏற்று இளைஞர் கூட்டம் அணி திரண்டது. விடுதலை என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தது நம் நாட்டு வீரர்களின் உயிர் தியாகம்.

லட்சக்கணக்கானவர்கள் தங்கள் உடலின் எலும்பை சுதந்திர வேள்வியின் விரகாக்கியதால் தான் நாம் வெளிச்சம் பெற்றோம்.

இந்திய சுதந்திரப் போருக்காக 1700களில் பிள்ளையார் சுழி போட்டவர்கள் நம் முன்னோர்கள்.

கற்பனை செய்து கூட பார்க்க இயலாத அளவிற்கு தொடர்ந்து 17 ஆண்டுகள் ஆங்கிலேயருடன் போர் நடத்தி சங்கரன்கோவிலில் மறைந்து போனார் மாமன்னர் பூலித்தேவர்.

பாளையக்காரர்கள் கோட்டை கட்டக்கூடாது என்ற கட்டளையை மீறி கோட்டை கட்டி ஆண்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின்  இறுதிக் காட்சியில் துரோகத்தால் கைதாகி தூக்குமேடை சென்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம் செறிந்த காட்சிகள் வெறும் திரைப்பட சம்பவம் அல்ல உண்மை வரலாறு.

கட்டபொம்மனின் படைத்தளபதியாக இருந்தவர் கெவினகிரி சுந்தரலிங்கம். ஆட்டுக்குட்டியோடும் அத்தை மகள் வடிவோடும் ஆயுதக் கிடங்கில் குதித்த தற்கொலை படை மாவீரன் சுந்தரலிங்கத்தின் வீரம் போற்றப்பட வேண்டியது.

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே உள்ள சின்னமலை என்றழைக்கப்பட்ட தீரன் சின்னமலை. தனது வீரமிக்க சிறு படையால் ஆங்கிலேய பெரும்படையை விரட்டியடித்தார்.

“பேரரசர்களுக்கு பணியாளனும் இழி பிறவியான வெள்ளைப் பறங்கியர்களுக்கு பரம எதிரிகளான மாமன்னர் மருது சகோதரர்கள் என்று கையெழுத்திட்டு பகிரங்கமாக ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிட்டவர்கள் மருது சகோதரர்கள்”..

மருது சகோதரர்களை தூக்கில் போட்டும் அவர்களது வாரிசுகளை நாடு கடத்தும் உறவினர்களை தூக்கிலிடும் கொலை செய்தார்கள் ஆங்கிலேயர்கள்.

தமிழ் நாட்டுச் சுதந்திரப் போருக்கு மேற்குறிப்பிட்ட மாவீரர்கள் ஒரு சிறு உதாரணமே.

நம் நாடு அடிமைப் பட்டால் நமக்கென்ன என்று வீட்டில் நம்மவர்கள் ஓய்வு எடுத்து இருந்திருந்தால் விடுதலைத் தீ மூட்டப்பட்டு இருக்காது. நாமும் இன்று சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்க முடியாது.

துரதிஷ்டவசம் என்னவென்றால் நம் மாணவர்களுக்கு நம் நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களது தியாக வாழ்வு முழுமையாக  தெரியவில்லை.  மாறாக திரைப்பட கதாநாயகர்களை தியாகிகளைப் போல பார்ப்பதும், தியாகிகளை காமெடியென்களாகப் பார்க்கவே நாம் பழகிவிட்டோம்.

இந்நிலை மாற வேண்டுமெனில் கல்வி நிலையங்களில்,  பாடப்புத்தகங்களில் நம் விடுதலை வீரர்களின் உண்மை  வரலாறு நமக்கு கற்பிக்கப்பட வேண்டும்.

புதிய தேசிய கல்வி கொள்கை அதற்கு வழிகோலும் என நம்புவோம்.

இன்றைய இளைய தலைமுறைக்கு நமது தேசத்தின் மீது நம்பிக்கையும் நாட்டுப்பற்றும் வளர்ந்தால் மட்டுமே நம் நாடு நல்லரசாகவும்  வல்லரசாகவும் மாற முடியும்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 இல் தேசிய கொடி ஏற்றி சுதந்திரத்தைப் போற்றுவது நமது வழக்கம்.

இந்த ஆண்டு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டாகிறது.

நமது தேசிய கொடிக்கு மிக நீண்ட பாரம்பரியம் உள்ளது. நமது  கொடியை காப்பதற்காக எண்ணற்ற கொடிகாத்த குமரன்கள் உயிர் நீத்தனர்.

பெற்ற சுதந்திரத்தின் நினைவுச் சின்னமாக கருதப்படக் கூடிய பாரத தேசத்தின் தேசியக்கொடியாகிய மூவர்ண கொடியை பார்க்கும் இடங்களில் எல்லாம் பட்டொளி வீசி பறக்க விட வேண்டும்.

தேசியம் காத்த செம்மல்களுக்காக நாட்டின் அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும், தெருக்களிலும், ஏன் வீடுகளிலும் கூட இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நமது பெருமைமிகு தேசியக் கொடியை கௌரவத்தோடு பறக்கவிட்டு நமது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவோம்.

இந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கோலாகலமாக, வெற்றித் திருவிழாவாக சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் வகையில் அரசாங்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுவோம்.

“கொரோனா காலகட்டத்தில் நமக்காக பணியாற்றி வரும் முன்கள பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், சமூகத்தின் கடைக்கோடியில் உள்ள அனைத்து துறையைச் சார்ந்தவர்களின் திருக் கரங்களால் பெருமைமிகு தேசியக் கொடியை ஏற்றி வைத்து பெருமைக்கு பெருமை சேர்ப்போம்”.

சுதந்திரப் போரின் தியாக மந்திரங்களாக பயன்படுத்தப்பட்ட வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கங்களை நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோம்.

மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தீரத்தை அறிந்து போற்றுவோம். அவர்களது பெருமைமிகு வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்.

உலக அரங்கில் நம் தேசத்தை அனைத்து துறைகளிலும் முன்னேறச் செய்வோம்.

ஜெய் ஹிந்த்.

லி.முத்து ராமலிங்கம்
தேசிய செயலாளர்
ABVP