கூகுள் சமீபத்தில் ஒரு உள் ஊதிய கால்குலேட்டரை அதன் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதன்படி, அந்நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவர்களின் வசிப்பிடம், அங்குள்ள விலைவாசிகளையொட்டி செலவுகள் குறையும் என்பதால் அதற்கேற்ப சம்பளத்தை குறைக்க அந்த கால்குலேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, நியூயார்க் போன்ற ஐந்து பெருநகரங்களுக்குள் வசிக்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்தால் அவர்களுக்கு ஊதியக் குறைப்பு இல்லை. ஆனால், பாஸ்டன், சான்பிரான்ஸிஸ்கோ பகுதிகளில் வசிப்போருக்கு சம்பளம் 10 முதல் 15 சதவீதம்வரை குறைக்கப்படும். தஹோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போருக்கு சம்பளம் 25 சதவீதம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் அதன் ஊழியர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் சம்பளத்தை குறைக்கும் பரிசோதனையை தற்போது நடத்துவது அந்த நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமல்ல, சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற நிறுவனங்களும் விரைவில் இந்த நடைமுறையைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவற்றின் ஊழியர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.