ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கரகவலசை கிராமத்திற்கு அருகில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் சிலைகள் கடந்த வாரம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்னரே நடந்த போதிலும் அது குறித்த செய்திகள் வெளியாகவில்லை. கடந்த ஞாயிறு அன்று சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதையடுத்து வேறு வழியின்றி கோயில் பூஜாரி இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். பூஜாரி தினசரி பூஜைகளை மேற்கொள்ளச் சென்றபோது கோவில் வளாகத்தில் உள்ள சரஸ்வதி தேவி, மகிஷாசுரமர்தினி, வினாயகர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. எனினும் கோயிலில் இருந்து விலை மதிப்புமிக்க பொருட்கள் எதுவும் காணாமல் போகவில்லை. இது குறித்து கோயில் நிர்வாகக்குழுவினரிடம் ஏற்கனவே புகார் அளித்தபோதும் அவர்கள் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஜனவரியில் சி.சி.டி.விக்களை நிறுவ மாநில அரசு உத்தரவிட்டுள்ள போதிலும் தற்போதுவரை கோயிலில் எந்த சி.சி.டி.விக்கள் நிறுவப்படவில்லை என தெரிவித்தார். ஸ்ரீகாகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பர்தர்,தலைமையில் காவல்துரையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சங்கராந்தி சமயத்தில் பக்தர்கள் வருகை தருகின்றனர். மற்ற நாட்களில், பூஜைகளுக்காக பூஜாரி மட்டுமே கோயிலைத் திறக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.