ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட் சமீபத்தில் எழுதிய கட்டுரையில், ‘பாரதம் மட்டும்தான் சீனாவுக்கு மாற்றாக இருக்க முடியும். சீனா பற்றிய ஒவ்வொரு கேள்விக்கும் பாரதமே பதிலாக உள்ளது. உலகின் பிற வளர்ந்து வரும் வல்லரசு நாளுக்கு நாள் போர்க்குணம் மிக்கதாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், உலகில் உள்ள அனைவருடைய நலன்களுக்காக பாடுபடும் பாரதம், விரைவில் வல்லரசு நாடுகளின் மத்தியில் தகுந்த இடத்தைப் பிடிக்கும்.
சீனாவை குறித்த என்னுடைய முந்தைய அனுமானங்கள் தவறாகிவிட்டன. சீனா வர்த்தகத்தைகூட ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் நல்லெண்ணம், ஆக்கபூர்வ சிந்தனையைப் பயன்படுத்தி அவர்களின் தொழில்நுட்பத்தையே சீனா திருடுகிறது. இறுதியில் அவர்களின் வியாபாரத்தையும் தொழில்களையும் அழிக்கிறது. முந்தைய சோவியத் யூனியனை விட சீனா தற்போது சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலியாவுடனான இருதரப்பு உறவுகளை பிரதமர் மோடி சிறப்பாக மேம்படுத்தியுள்ளார். பாரதம், சீனாவைப் போல் பணக்கார நாடாக இல்லாவிட்டாலும், அங்கு தற்போது நடைபெறும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக மாண்பு, உலகின் இரண்டாவது பெரிய எஃகு, மருந்து உற்பத்தித் திறன், கணினி மென்பொருட்கள் உற்பத்தி திறமை போன்றவை, உலகளவில் சீனாவுக்கு மாற்றாக பாரதம் விளங்கும் என்பதையே காட்டுகிறது. உலகமே சீனாவின் இறக்குமதியைச் சார்ந்துள்ளது என்ற ஆபத்தை கொரோனா பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. பாரதமும் ஆஸ்திரேலியாவும் சிறந்த கூட்டாளிகளாக விளங்கும்’ என தெரிவித்தார்.