உஜ்வாலா 2.0

உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, பிரதமரின் உஜ்வாலா – 2 திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார். இதில், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடும் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

முன்னதாக, 2021-22-க்கான‌ நிதிநிலை அறிக்கையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, பிரதமரின் இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க (உஜ்வாலா 2.0 கீழ்) திட்டமிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் இதில் சேர்வதற்கு ரேஷன் அட்டை, முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை. ‘குடும்ப உறுதி ஆவணம்’, ‘முகவரி ஆதாரத்திற்கு’ சுய வாக்குமூலமே போதுமானது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், உத்தரப் பிரதேச முதல்வர் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.