டோக்கியோ ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகள் கழித்து பாரதம் வெண்கலப் பதக்கம் வென்றது. இது மக்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. கிரிக்கெட் மோகத்தில், நமது தேசிய விளையாட்டான ஹாக்கியை மறந்த நமக்கு இது ஒரு மறுமலர்ச்சி எனலாம். ஆனால், இதற்கு வித்திட்டது ஒடிசா மாநில அரசு என்பது பலருக்கும் தெரியாது. ஒடிசாவின் சுந்தர்கர் பகுதி இதுவரை 5 கேப்டன்களை, 60 க்கும் மேற்பட்ட சர்வதேச ஹாக்கி வீரர்களையும் உருவாக்கியுள்ளது.
2018ல் சஹாரா குழுமம் ‘ஹாக்கி இந்தியா’வுடனான தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை நிறுத்திக்கொண்டது. இதனையடுத்து ஒடிசா அரசு, ஸ்பான்சர்ஷிப்பிற்கு பொறுப்பேற்றது. இதற்காக ரூ. 150 கோடியை ஒதுக்கியது. தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்ய ஒரு மாநில அரசே முன்வந்தது இதுவே முதல் முறை.
2017ல் ஹாக்கி இந்தியா லீக்கில் வென்ற கலிங்கா லான்சர்ஸ் கிளப்பிற்கு நிதியுதவி, 2018ல் ஹாக்கி உலக லீக் போட்டிகள், 2019ல் FIH ஹாக்கி ஆண்கள் இறுதிப் போட்டிகள், ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டிகள், 2020ல் FIH ப்ரோ லீக் ஆகிய போட்டிகளை நடத்தியது ஒடிசா அரசு. ஹாக்கியில் உலகத்தர விளையாட்டு வீரர்களை உருவாக்க, டாடா குழுமத்துடன் இணைந்து கலிங்கா ஸ்டேடியத்தில் ஒடிசா நேவல் டாடா ஹாக்கி உயர் செயல்திறன் மையத்தை (HPC) அமைத்துள்ளது.
தற்போது, பழங்குடித் தலைவர் பிர்சா முண்டாவின் பெயரில், சுந்தர்கரில் நாட்டின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒடிசா மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் செயற்கை ஹாக்கி விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகின்றன.
1860களில் பழங்குடியினப் பகுதிக்கு வந்த ஐரோப்பிய மிஷனரிகளால் சுந்தர்கரில் ஹாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், பல நூற்றாண்டுகளாக, தெற்கு ஜார்க்கண்ட், ஒடிசாவின் சுந்தர்கர், சத்தீஸ்கரின் ஜாஷிபூர் ஆகியவற்றை உள்ளடக்கிய சோட்டனக்பூர் பீடபூமியில் ஹாக்கி விளையாட்டு பழங்குடியினரின் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. அங்கு கையில் ஹாக்கி மட்டையை பிடிக்காத குழந்தைகளே இல்லை எனலாம். இதனால், ஒடிசாவின் சுந்தர்கர் பகுதி ‘பாரதத்தின் ஹாக்கி தொட்டில்’ என அழைக்கப்படுகிறது.