தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான இடங்கள், கட்டிடங்கள், டோல் பிளாசாக்களின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, போக்குவரத்து, நெடுஞ்சாலை சேவைகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்ய மத்திய மின்துறை அமைச்சகத்தின் இ.இ.எஸ்.எல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாக்பூர் பைபாஸ் சாலை, சோலாப்பூர் யெட்ல்ஷி ஆகிய இடங்களில் டோல் பிளாசாக்களின் கூரைகள், சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வைகங்கா பாலம் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும், ‘கடந்த 2018ல் 124 ஆக இருந்த, மின்சார வாகனங்களின் பதிவு, தற்போது 1,356 என அதிகரித்துள்ளது. சரக்கு போக்குவரத்துக்கான மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2018ல் 6246 ஆக இருந்தது. அது தற்போது 27,645 ஆக உயர்ந்துள்ளது. திரவ நிலை இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வரும் 2030க்குள், எரிபொருளில் திரவ எரிவாயு கலப்பு 15 சதவீதம்வரை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.