இன்று ஹிரோஷிமா நினைவு தினம்

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆகஸ்ட் 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் 73வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படை தளத்தின் மீது ஜப்பான் 1941, டிசம்பர் 7ல், அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தியது. இதனால் இரண்டாம் உலகப் போரில் இறங்க வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. ஜப்பானுக்கு மறக்கமுடியாத திலடி தர தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 1945 ஆகஸ்ட் 6ம் தேதி, ஜப்பான் நேரப்படி காலை 8:16 மணிக்கு பி-29 ரக எனோலாகெய் விமானம் மூலம் ஹிரோஷிமா நகரில் ‘லிட்டில்பாய்’ எனும் 60 கிலோ எடையுள்ள உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டது. இது அப்பகுதியில் 4 சதுர மைல் சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது.

அந்த நகரில் இருந்த 90 ஆயிரம் கட்டடங்களில் 28 ஆயிரம் கட்டடங்கள் மட்டுமே தப்பின. ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3.50 லட்சம். இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். அதன் பாதிப்புகள் இன்றும் தொடர்கிறது. குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து, அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன் இதனை அறிவித்தார். அதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது உலக நாடுகளுக்கு தெரியவந்தது.

மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ல் ஜப்பானின் நாகசாகி நகரின் மீது ‘பேட்மேன்’ என்ற 2வது அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இத்தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை, 2.30 லட்சமாக உயர்ந்தது. 6 நாட்கள் கழித்து 1945 ஆகஸ்ட் 15ல் ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது.

அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த நகரங்கள், அந்த சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சிஅடைந்தது அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.