கோயில் மாடுகள் பொதுநல மனு

அண்மையில், ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் 100க்கும் மேற்பட்ட பசுமாடுகள் எவ்வித அறிவிப்பும் இன்றி தானமாக அளிக்கப்பட்டது. கோயிலுக்கு பக்தர்கள் அளித்தவற்றை காப்பது ஹிந்து அறநிலையத் துறையின் கடமை. அது நிலம், நகைகளுக்கு மட்டுமல்ல பசுக்களுக்கும் பொருந்தும். அப்படி இருக்கையில், அவற்றை தானமாகத் தர இவர்கள் யார்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், கோயில் நிர்வாகம், நன்கொடையாக வழங்கப்பட்ட பசுக்களை இயற்கையான சூழலில் பராமரிக்க 10 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும், அவற்றுக்கு இயற்கை மரணம் ஏற்படும்வரை காக்க வேண்டும். அவற்றை யாருக்கும், எக்காரணம் கொண்டும் தானமாக தரக்கூடாது. கால்நடை கண்காணிப்பு பணிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 7 மனுக்களை ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்திருந்தார்.

நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தால் அவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அது குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எத்தனை கோயில்களில் எத்தனை பசுக்கள், காளைகள், கன்றுகள், மற்ற கால்நடைகள் உள்ளன, அவற்றின் வயது என்ன, எங்கு உள்ளது போன்ற விவரங்களையும் தாக்கல் செய்ய வெண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.