தாய்ப்பால் எனும் அருமருந்து

பிறந்தவுடன் குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய முதல் பரிசு தாய்ப்பால். ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் மகத்துவம், அதை தருவதால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் குறைவாகவே ஏற்படுகிறது, அந்த குழந்தைகள், மற்ற உணவுகளையும் பானங்களையும் உண்டு வளர்ந்த குழந்தைகளை விட ஊட்டமாகவே இருக்கின்றன. பிறந்து ஆறு மாதம் வரை எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட்டால், ஒரு ஆண்டிற்கு சுமார் 1.5 மில்லியன் சிசுக்களை காப்பாற்ற முடியும். தாய்ப்பாலுக்கு மாற்றாக, குழந்தைகளுக்கு தரப்படும் பால் பவுடர், அல்லது மாற்று உணவுகளால் சிசுக்களின் ஆரோக்கியம் பாதிப்படையலாம்.

நீடித்து தாய்ப்பால் ஊட்டி வந்ததன் காரணமாகவே மார்பகப் புற்றுநோய்த் தாக்கம் 20 வருடங்களுக்கு முன்புவரை பெண்களிடத்தில் குறைவாகவே இருந்தது. குழந்தை பிறந்த உடன் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க, ‘ஆக்சிடோசின்’ எனும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். அதனால், பிள்ளை பெற்ற பின் உண்டான அதிக ரத்த இழப்பை ஈடு செய்யப்படும். கருப்பை வீக்கம் சரியாகும். இந்த ஹார்மோன் தாயின் உடலும் மனதும் நல்ல நிலையில் இருக்க உதவுகிறது.

பிரசவ காலத்தில் சர்க்கரை நோய் பாதிப்படைந்த தாய்மார்களில் மூன்றில் ஒருவருக்கு, பிற்காலத்தில் நீரழிவு நோய் வரும் சாத்தியம் அதிகம். நீடித்துப் பாலூட்டுவது, நீரழிவு நோய் வராமலிருக்க உதவும். தாய்ப்பால் ஊட்டுவதால் தாய் உண்ட உணவில் உள்ள ‘கலோரி’ குழந்தைக்கும் செல்லும், இது பிரசவ காலத்தில் அதிகரித்த உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. தாய்ப்பால் தருவது பெண்களுக்கு முகப் பொலிவையும் அழகையும் கூட்டுகிறது. ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கிறது.

பெரும்பான்மையான தாய்மார்களினால் தாய்ப்பால் நிச்சயமாக ஊட்டமுடியும். தாய்ப்பாலூட்டுவதற்கு தைரியமில்லாத பெண்களுக்கு, கணவர், குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்களின் ஊக்கமும், நடைமுறை ஆதரவும் தேவை. மருத்துவர் உள்ளிட்ட சுகாதார துறை அலுவலர்கள், பெண்களுக்கான அமைப்புகளும் இதில் பெரும் பங்காற்ற முடியும்.