இ-ருபி

பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று இ-ரூபி, டிஜிட்டல் கட்டண தீர்வை அறிமுகப்படுத்தினார். இதற்கு முன், பணபரிவர்த்தனைத் துறையில் மத்திய அரசு அறிமுகம் செய்த பாரத சுயசார்பு வெற்றி திட்டங்களான யு.பி.ஐ, பீம் செயலி, ருபே கார்ட் போன்றே இதுவும் தேசம் கடந்து புகழ் பெறும் என்பது திண்ணம்.

இ-ரூபி என்றால் என்ன?

இ-ருபி என்பது ஒரு கியு.ஆர் குறியீடு அல்லது குறுஞ்செய்தி அடிப்படையிலான மின் ரசீது முறை. இது பயனாளிகளின் அலைபேசிக்கு வழங்கப்படுகிறது. இந்த தடையற்ற பணம் செலுத்தும் முறையை பயன்படுத்துபவர்கள், அதனை பணமாக்க வங்கி கணக்கு அட்டை, இணையதள வங்கிக் கணக்கு, மின்னணு பரிமாற்ற சேவைகளை தேடி ஓடவேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பாரதம் இன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனைத் துறையில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆன்லைன் கட்டணத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதை கருத்தில் கொண்டு, தேசிய என்.சி.பி.ஐ, நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையில் நடுவில் இடைத்தரகர் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, பயனாளிகளுக்கான முழு பலன்களும் எந்த கசிவும் இன்றி நேரடியாக அவர்களை சென்றடையும்.

இ-ருபி தளத்தை ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, தாய் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்கள், உர மானியம், காசநோய் ஒழிப்பு திட்டங்கள், ஊட்டச்சத்து திட்டம் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். தனியார் துறையினரும் இந்த டிஜிட்டல் வவுச்சர்களை தங்கள் ஊழியர் நலன் மற்றும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம்.

யு.பி.ஐ எனப்படும் யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் என்பது மொபைல் ஆப் மூலம் வங்கிக் கணக்கிற்கு உடனடி பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் ஒரு பண பரிவர்த்தனை முறை. இந்த இ-ருபியும் யு.பி.ஐ இயங்குதளத்தை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டது ஆனால் அதை பணமாக்க தனியாக ஒரு மொபைல் ஆப் பயன்பாடு தேவையில்லை.