கன்னியாகுமரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நாகர்கோயில் நாகராஜா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ.க தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி, திருக்குறளை பல இடங்களில் எடுத்துக்காட்டி பேசி வருகிறார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக ஒரு நாடக அரசியலை தி.மு.க செய்து வருகிறது. தேசிய மீன் வள மசோதா விவகாரத்திலும் தி.மு.க நாடகத்தை நடத்துகிறது. அவர்கள் கடந்த தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்காக அறிவித்த எதையும் நிறைவேற்றவில்லை. தொலைப்பேசி ஓட்டு கேட்கப்பட்டதாக எதிர்கட்சிகள் கூறுவது என்பது இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக கூறுவது. வேலையில்லாத காங்கிரஸ் கட்சியினர் கதை திரைக்கதை வசனம் என்பவற்றை எழுதி ஒரு படத்தை நாடாளுமன்றத்தில் போட்டார்கள். அது அரை மணி நேரத்திற்கு மேல் ஓடவில்லை. ராகுலுக்கும் வேறு வேலை இல்லை. மமதா பேனர்ஜி இந்த நாடகக்குழுவில் புதிதாக சேர்ந்துள்ளார்’ என கூறினார்.