சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோயில், பணி தாமதமாகியுள்ள கோயில், ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோயில் என வகைப்படுத்தி அனைத்து கோயில்களுக்கும், ‘மாஸ்டர் பிளான்’ என்ற திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆகம விதிப்படி திருப்பணி நடக்கும். கோயில் வளாகத்தில் வாய்ப்புள்ள இடங்களில் திருமண மண்டபம் கட்டப்படும். அந்தந்த வருவாய், அந்தந்த கோயில்களுக்கு பயன்படுத்தப்படும். 9 ஆண்டுகளாக கோயில்களுக்கு பக்தர்கள் வேண்டுதலாகக் கொடுத்துள்ள தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன. அதில் கோயில் பயன்பாட்டுக்கு போக, மீதியை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும். இதன் மூலம், ஆண்டுக்குரூ. 20 கோடி வட்டி கிடைக்கும். ஹிந்து அறநிலையத் துறை கோயில்கள், தனியார் சொத்துகள் கிடையாது. பல மன்னர்கள், ஜமீன்தார், செல்வந்தர்களால் கோயில்களுக்கு நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளன. அதனால், தனியாரிடம் கோயில்களை ஒப்படைக்க முடியாது’ என தெரிவித்தார்.
இது குறித்து சமுக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள ஹிந்துக்கள், தங்க நகை உருக்குவதாகக்கூறி பழங்கால நகைகளை அழித்துவிடக்கூடாது, இது போன்ற சமயங்களில் சிலர் தங்கத்தை திருட அதிக வாய்ப்புகள் இருப்பதால் தங்கத்தின் எடை, தரம் உள்ளிட்டவை முறையாகவும் கவனமாகவும் கண்காணிக்கப்பட வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், ஹிந்து கோயில்களை அரசுதான் அறநிலையத்துறை என்ற பெயரில் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதற்கு முன்பு அப்படி இல்லை. தனியாரிடம் தர சொல்லி யாரும் கோரவில்லை. மதசார்பற்ற அரசுக்கு கோயிலில் என்ன வேலை? அதனை ஹிந்து அமைப்புகளிடம் தந்துவிட்டு அரசு கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என்றுதான் பல காலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் புரிந்துக்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.