நமது நாட்டின் 7,500 கி.மீ. கடலோர பகுதியில் படகு போக்குவரத்தை நடத்தும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமான ‘சாகர்மாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு துறைகளான துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பல வழித்தடங்களில் ‘ரோ-ரோ, ரோ-பேக்ஸ்’ என்ற சரக்கு மற்றும் பயணியர் கப்பல் சேவைகளுக்கான பணிகள் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, சரக்கு போக்குவரத்து, தினசரி பயணம் போன்றவை இதனால் மேம்படும். தனியார் நிறுவனங்கள் இதில் ஊக்குவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் இந்த சேவையை துவங்குவதற்காக, சென்னை துறைமுகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகள் வேகமாக தயாராகி வருகின்றன. இப்பகுதிகளில் கார்கள், பயணியரை ஏற்றி செல்லும் வகையில் ரோரோ, ரோபேக்ஸ் கப்பல்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் இதில் பங்கேற்றால் அடுத்த 5 மாதங்களில் இப்பகுதிகளில் படகு போக்குவரத்து துவங்கிவிடும் என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.