நிலவில் மனிதன் காலடி வைத்த தினம் இன்று

புவியிலிருந்து 2,40,000 மைல்கள் தொலைவில் உள்ளது நிலா. அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், நிலவானது உயிர் வாழ்க்கைக்குத் தகுதியற்ற, வறண்ட துணைக்கோள் அவ்வளவுதான். ஆனால், மனிதர்கள் என்றும் எதனுடனும் திருப்தியடைந்து விடுவதில்லை. அதிலிருந்து தங்கள் கற்பனைகளை விரித்துக்கொண்டே செல்பவர்கள். அந்த வகையில், நிலவு மனிதனின் பிரக்ஞையில் ஆழமாக ஊடுருவியுள்ளது. அதனால்தான், நிலவை பற்றிப் பாடாத புலவர்களோ கவிஞர்களோ இல்லை, அதனை மேற்கோள் காட்டாத இலக்கியங்கள் இல்லை. விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால் நாளடைவில், அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே நிகழ்ந்த பனிப்போர் விளைவாக, அந்த அழகு நிலா, கௌரவத்தின் சின்னமாக பார்க்கப்பட்டது.

1957 அக்டோபர் 4ல் ‘ஸ்புட்னிக் I’ என்ற உலகின் முதல் செயற்கைக்கோளை, சோவியத் யூனியன் விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்தது. 1961ல் அமெரிக்கா தனது முதல் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. பின் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி போட்டு நிலவுக்கு விண்கலத்தை அனுப்பின. இதில், 1969ல் அமெரிக்கா, நிலவுக்கு மனிதனை அனுப்பி சாதனை படைத்தது.

நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்து இன்றுடன் 52 ஆண்டுகள் நிறைவடைகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ‘நாசா’ விண்வெளி மையத்தின் சார்பில் 1969 ஜூலை 16ல் அப்பல்லோ- II என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் மைக்கேல் கோலின்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

இந்த விண்கலம் ஜூலை 20ல் இந்திய நேரம் நள்ளிரவு 12.48 மணிக்கு நிலவில் இறங்கியது. நீல் ஆம்ஸ்டிராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக அமெரிக்காவின் தேசியக் கொடியை நிலவில் பறக்க விட்டார். பின்னர் எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார். மொத்தம் 195 மணி,18 நிமிடம், 35 வினாடிகள் இந்த பயணம் நீடித்தது. 8 நாட்களுக்கு பின், ஜூலை 24ல், கொலம்பியாவில் வெற்றிகரமாக இந்த விண்கலம் தரை இறங்கியது. அப்பல்லோ – II விண்கலத்தை தயாரிக்க 6 ஆண்டுகளும் 20 பில்லியன் டாலர் செலவும் ஆனது.

பச்சையப்பன்