கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழகம் கேரளா ஆந்திரா கர்நாடகா மஹாராஷ்டிரா ஒடிசா மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் கலந்துரையாடினார். அப்போது பிரதமர், கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கைகள் வருகின்றன. இந்த ஆறு மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் 80 சதவீத தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டின் உயிரிழப்புகளில் 84 சதவீதம் இந்த ஆறு மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. கேரளா மஹாராஷ்டிராவில் நிலைமை மிக மோசம். மூன்றாவது அலையை தவிர்க்க இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இது நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை. கொரோனா அவசரகால நிதியாக 23 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 332 ஆக்சிஜன் ஆலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 53 ஆக்சிஜன் ஆலைகள் மட்டுமே மாநில அரசுகள் நிறுவியுள்ளன. புதிய அவசர சிகிச்சை பிரிவு, படுக்கைகள், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அதற்கு தேவையான நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.