சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நில ஆக்கிரமிப்பு சம்பந்தமான வழக்கில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2019ம் ஆண்டிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் அளவும், மீட்டதாக அரசு தெரிவிக்கும் அளவும் முரணாக இருப்பதாக மனுதாரர் தெரிவித்தார். இதையடுத்து, கோயிலுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் எவ்வளவு, மீட்கப்பட்ட நிலம் எவ்வளவு? என, அறிக்கைத் தாக்கல் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கோயில் நிலங்களைப் பாதுகாப்பதிலும், ஆக்கிரமிப்புகளை மீட்கும் நடவடிக்கைகளிலும் அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாகச் செயல்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை மீட்க உரிய வழிமுறைகளை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, வழக்கை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.