அசாமின் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம்

அசாமில் இருந்து இறைச்சிக்காக அதிக அளவில் மாடுகள் உட்பட பல கால்நடைகள் அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இதில் 1,000 கோடி அளவுக்கு முறைகேடு வர்த்தகம் நடைபெறுகிறது. மேலும், சுற்றுசூழல் சீர்கேடு, விவசாய பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. பொதுமக்களுக்கும் இதனால் பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க, அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, சட்டசபையில், கால்நடைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, ‘அசாமில் ஹிந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், மாட்டிறைச்சியை சாப்பிடாத சமூகத்தினர் வாழும் பகுதிகள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களில், 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது. உரிய அங்கீகாரம், அனுமதி இல்லாமல் மாடுகளை இறைச்சிக்காக வெட்டக்கூடாது, மாடுகளை இறைச்சிக்காக ஏற்றி செல்லக் கூடாது. மாட்டிறைச்சி விற்பனை செய்தாலோ, மாடுகளை ஏற்றி சென்றாலோ 6 மாதத்தில் இருந்து 8 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ1,000 முதல் ரூ. 5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த சட்டத்தை மீறி செயல்பட்டு தப்பி ஓடி தலைமறைவானால் அவர்கள் வாழ்ந்த இடங்களிலும் பொது இடங்களில் அவர்களது புகைப்படங்கள் ஒட்டப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் தொடரப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசம் முழுவதிலும் உள்ள பெரும்பான்மையான மக்களிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. சில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.