ஷிவ் நாடார் தலைமையில் 1976ம் ஆண்டு 6 நண்பர்கள் உடன் இணைந்து டெல்லியில் துவங்கப்பட்ட ஒரு குட்டி நிறுவனம் ஹிந்துஸ்தான் கம்பியூட்டர் லிமிடெட். இன்று இந்நிறுவனம் எச்.சி.எல் சாம்ராஜ்யமாகப் பல பிரிவுகளில் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. சுமார் 20 பில்லியன் டாலருக்கு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் Forbes இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம் பெறும் ஒரு தமிழ் பெயர் ஷிவ் நாடார்.
திருச்செந்தூர் அருகில் உள்ள மூலை பொழில் கிராமத்தில் பிறந்த ஷிவ் நாடார், படித்து முடித்த பின்பு, புனேவில் பணியாற்றினார். வேலையில் இருக்கும்போதே வியாபாரம் செய்யத் திட்டமிட்டார். பாரதத்தின் புதிய தொழிற்கொள்கையால், ஐ.பி.எம் பாரதத்தை விட்டு வெளியேறியது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். ‘மைக்ரோகார்ப்’ என்ற நிறுவனத்தை, நண்பர்களுடன் இணைந்து ரூ. 1.87 லட்சம் முதலீட்டில் துவக்கினார்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையானத் தரத்தில் கம்பியூட்டர்களைத் தயாரித்தார். குறிப்பாக 1988ல் பல புதிய சிப்கள் இணைத்து ஹெச்சில் UNIX இயங்குதளம் கொண்ட கம்பியூட்டர்களைத் தயாரித்தார். இதை ஹெச்.பி, மற்றும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்த 3 ஆண்டுகள் கழித்துத்தான் தயாரித்தன. அந்த அளவிற்கு ஹெச்சிஎல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்தது.
பாரதத்தில் தயாரித்து அதை வெளிநாடுகளில் வர்த்தகம் செய்யவும், அதற்கான தேவையை உருவாக்கவும் தெரிந்தவர் ஷிவ் நாடார். இவர் தான் ஒரிஜினல் ‘மேக் இன் இந்தியா’ தொழிலதிபர் என்றும் வினித் நாயர் கூறியுள்ளார். கம்பியூட்டர் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்த ஹெச்சிஎல், 2000ல் ஐ.டி சேவை துறையில் நுழைந்தது. அதிலும் சாதனை படைத்தது.
தொழில்துறையில் மட்டும் இல்லாமல், பல்வேறு சேவைப் பணிகளையும் செய்துவருகிறார். 2008ல் ஷிவ் நாடார் அறக்கட்டளையை நிறுவி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார். தன் வாழ்க்கையில் சரியான பாதையை தேர்ந்தெடுத்து, கடின உழைப்பால் குறுகிய காலத்திற்குள் மிகப்பெரிய இலக்கினை அடைந்தவர் இவர் என்று சொன்னால் அது மிகையல்ல.
கோகுல் சீனு