பிரதமர் நரேந்திர மோடி, கோவின் குளோபல் கான்க்ளேவில் உரையாற்றினார், அப்போது, ‘உலகம், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக, கோவின் இயங்கு தளம் பொது நன்மையை கருதி விரைவில் திறந்த மூல மென்பொருளாக மாற்றப்படும். அதனை பயன்படுத்த விரும்பும் அனைத்து நாடுகளுக்கும் அது கிடைக்கும். இது பாரத அரசிற்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என தெரிவித்தார். இந்த உலகளாவிய கோவின் கான்க்ளேவ் நிகழ்ச்சியில், வெளிநாடுகளை சேர்ந்த 196 அதிகாரிகளும், 41 நாடுகளைச் சேர்ந்த 116 தனியார்களும் பங்கேற்றனர்.
கோவின் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டதில் இருந்து ஜூலை 1 வரையில் 35.4 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனை பயன்படுத்தியுள்ளனர். கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா உள்ளிட்ட76 நாடுகள், நமது கோவின் செயலியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன. மேலும், கோவின் உடன் ஒருங்கிணைக்க பேடிஎம், ரிலையன்ஸ், இபிபோ உள்ளிட்ட தனியார் மற்றும் பொது நிறுவனங்களிலிருந்து 204 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 148 ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை ஒருங்கிணைப்புகளை நிறைவு செய்யும் பணியில் உள்ளன.
கோவின் செயலியில், பதியப்பட்ட தகவல்களில் உள்ள தவறுகளை திருத்த தேவையான வசதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்ததாக, சர்வதேச பயணங்களுக்கான தடுப்பூசி சான்றிதழ்களுடன், பாஸ்போர்ட்டை இணைக்கும் அம்சமும் இதில் இணைக்கப்படுகிறது. உலக நாடுகள் இதனை இலவசமாக பயன்படுத்தலாம் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை; யாரும் இந்த மென்பொருளை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.