சித்திரவதை தடுப்பு தினம்

மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, நீதி, அமைதி ஏற்பட வாய்ப்புண்டு.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் இன்று. உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐ.நா. அவையினால் ஜூன் 26ம் அன்று அனுசரிக்கப்படுகிறது.

சித்திரவதை என்பது உடலால், உள்ளத்தால் வேதனையை திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது  என்று பொருள் கொள்ளப்படுகிறது.

சித்திரவதை பற்றி சமயபுராணக் கதைகளில் இருந்தே நாம் கேட்டிருக்கிறோம். தீமை செய்பவர் நரகத்தில் சித்திரவதை செய்து தண்டிக்கப்படுவர் என அறிந்தவர்கள்தானே நாம். ஹிந்து சைவ சமயக்குரவரான அப்பர்கூட சமணர்களால் சித்திரவதை செய்யப்பட்டார்.

வரலாற்றுச் சம்பவங்களை ஆராயும்போது 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சித்திரவதைகள் மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது. பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப்பரவலாக இடம் பெறத்தொடங்கி இன்றளவும் நீடித்து வருகின்றது.

மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ்வாறு தோன்றியது என்று ஆராயும்போது, மனிதர்களின் பரம்பரை அலகுகளை ஆராய்ந்த மருத்துவர்கள், ஒரு சில மனிதர்கள் பிறக்கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய குணங்களை கொண்டிருக்கிறார்கள் எனக் கூறுகின்றனர்.

நவீன காலத்தில் சித்திரவதையின் நோக்கங்களாக, செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்தல், சாதகமான தகவலையறிய தூண்டுதல், தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல், சரணடைய வைத்தல் எனப் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களைக் கொண்டதாக உள்ளது.

இன்றைய காலத்தில் தேவைப்பட்ட தகவலைப் பெற வேறுவழிகள் உள்ளபோதும், அத்தகவல்களைப் பெற்ற பின்னரும்கூட சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மனிதனின் அநாகரிகத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றன. உலகம் முழுவதும் அகதிகளாக உள்ளவர்களில் 10லிருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மனிதனால் மனிதனுக்கு ஏற்படும் சித்திரவதைகள் குறையவே இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

சிந்துஜா