‘நீட்’ நுழைவுத் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், அரசு அதிகாரிகள் தவிர உறுப்பினர்களான இரண்டு பேரும் ‘நீட்’ தேர்வு எதிர்ப்பாளர்கள் என கூறப்படுவதால் நடுநிலையாளர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, ‘மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. இது வினோதமான நிலைப்பாடு. தமிழக மாணவர்கள் திறமையானவர்கள் அவர்களுக்கு சிறந்த கல்வியை அளித்தால் அனைத்து நுழைவு தேர்வுகளிலும் முன்னிலை பெறுவர். எனவே தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கற்பித்தல் தரத்தை உயர்த்த முனைய வேண்டும். அதற்கு கமிட்டி அமைக்க வேண்டும். மாறாக நீட் தேர்வு கமிட்டி அமைத்திருப்பது கண் துடைப்பு. கமிட்டியின் முதல் கூட்டத்திலேயே கமிட்டியின் தலைவர் ‘நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது’ என கூறியுள்ளார். அரசின் நிலைப்பாடும் அதுவே. கமிட்டியில் நீட் எதிர்ப்பாளர்கள், அரசின் செயலர்கள் மட்டுமே உள்ளனர். அதில், நடுநிலையான மாணவர் நலன் பேணும் கல்வியாளர்கள் இடம் பெற வேண்டும். நீட் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறி விட்டது. கமிட்டியின் பரிந்துரையால் ஒன்றும் நடக்காது’ என கூறியுள்ளார்.