வடபழநி கோயில் சொத்து மீட்பு

ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியம், ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோவது, அரசியல்வாதிகளின் தலையீடு உள்ளிட்ட காரணங்களால், தமிழகம் முழுவதும் பல்வேறு ஹிந்து கோயில்களின் பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள், ஆக்கிரமிப்பு, விற்பனை என களவாடப்பட்டுக் கொண்டுள்ளது. எந்த ஆட்சி வந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.

இந்நிலையில், வடபழநி முருகன் கோயிலின் ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தமிழக அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு, ‘கோயில் சொத்தில் தனியார் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது. இதனை தடுக்க காவல்துறை, மாநகராட்சி, அறநிலையத்துறை இணைந்து தற்போது, வடபழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி  மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். இது டிரெய்லர்தான் இனிமேல்தான் மெயின் பிக்சரை பார்ப்பீர்கள். அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த சொத்துக்களை மீட்க ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் தொடர் போராட்டங்கள், சட்ட போராட்டங்கள் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீட்பு நடவடிக்கையை எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.