பாரதி சேவா சங்கம் மற்றும் அசோக்நகர் ஆஞ்சநேயர் கோயில் இணைத்து நடத்திய இ – கோடைக்கால பண்பாட்டு வகுப்பு 2021 மிக சிறப்பாக கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று ஜூன் 1ல் இனிதே முடிவடைந்தது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சென்ற வருடம் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டது இந்த இ – பண்பாட்டு வகுப்பு. அது புதியது, பல படிப்பிணைகளைத் தந்தது.அதனால் இந்த வருடம் அது நமக்கு பழகி விட்டது.சென்ற வருடம் போலவே ஒரு முக்கியக்குழு பல கிளைக்குழுக்கள் என்றுதான் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், வரவேற்புக் காரணமாக இம்முறை ஒருபடி உயர்ந்து இரண்டு முக்கியக் குழுக்கள் பல கிளைக்குழுக்களாக மாறியது.
இம்முறை தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு போன்ற பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பக்திப் பாடல்கள்,பஜனை,தேசபக்திப் பாடல்,அமுதமொழி,கதை,கைவினைப்பொருட்கள், ஓவியம் என பல பிரிவுகள் இந்த வகுப்பில் இருந்தது. மாணவர்கள் என்ற கணக்கில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், எல்.கே.ஜி முதல் 12வது படிக்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும்கூட இந்த வகுப்பில் கலந்துகொண்டு கலாச்சார பண்பாட்டு விசயங்களை அறிந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவியம் வரையவே தெரியாது என்று சொன்ன சிறுவன் இன்று அழகாக வரைகிறான்,பாட்டே வராது என்ற சொன்னவர்கள் அருமையாக பாடுகிறார்கள் என்பது இந்த வகுப்புக்கு கிடைத்த வெற்றி.கூட்டு முயற்சிக்கு என்றுமே வெற்றி என்பதற்கு இந்த வகுப்பு ஒரு உதாரணம்.