விதிகளுக்கு இணங்காத சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை கடந்த பிப்ரவரி 25, 2021 அன்று வெளியிட்ட மத்திய அரசு, சமூக ஊடக நிறுவனங்கள் இந்த விதிகளுக்கு முழுமையாக இணங்க மூன்று மாத கால அவகாசம் அளித்தது. காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த சூழலில், பிரபல சமூக ஊடக நிறுவனங்கள் எதுவும் புதிய விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.சமூக ஊடக நிறுவனங்கள் இந்த விதிகளுக்கு இணங்கவில்லை என்றால், அவர்கள், தங்கள் சமூக ஊடக தளங்களுக்கான அந்தஸ்தையும் பாதுகாப்பையும் இழக்கக்கூடும்.பாரதத்தின் சட்டங்களின்படி குற்றவியல் நடவடிக்கைகளுக்கு அவர்கள் பொறுப்பாவார்கள் என்றும் கூறப்படுகிறது. பாரதத்தை சேர்ந்த சமூக ஊடக நிறுவனமான “கூ”வைத் தவிர தவிர, சமூக ஊடக நிறுவனங்கள் எதுவும் புதிய வழிகாட்டுதல்களின்படி மக்கள் குறை தீர்க்கும் அதிகாரி, நோடல் தொடர்பு நபர்களை நியமிக்கவில்லை.சில சமூக ஊடகத் தளங்கள் அமெரிக்காவில் உள்ள தங்கள் நிறுவனத்தின் தலைமையகத்தின் அறிவுறுத்தல்களுக்காக காத்திருப்பதாக ஒரே பதிலை சொல்லிவருகின்றன.சில சமூக ஊடகத் தளங்கள் விதிகளுக்கு முழுமையாக இணங்க ஆறு மாதங்கள் வரை அவகாசம் கோரியுள்ளன.டுவிட்டர் போன்ற சில சமூக வலைத்தளங்கள் தங்களது சொந்த உண்மைச் சரிபார்ப்பவர்களை சில அன்னிய நிறுவனங்கள் வாயிலாக பணிக்கு அமர்த்தியுள்ளன.ஆனால் அவர்களின் முழு விவரங்களை அளிக்கவில்லை, அவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை.இந்நிலையில், டுவிட்டர், முகநூல் உண்மை சரிபார்ப்பாளர்கள் தான்தோன்றித் தனமாகவும், ஒரு சார்பாக செயல்படுகின்றனர், அவர்கள் சட்டதிட்டங்களுக்கு விரோதமாக நடக்கின்றனர் எனவே அவற்றை முடக்க வேண்டும் எனும் கோரிக்கைகளும் சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.